Saturday, September 02, 2006

ஆழ்வார் குறிப்பு I - திருப்பாணாழ்வார்

திருப்பாணாழ்வார், பிறவாது பிறந்த தெய்வக் குழந்தையாய், உறையூரில் (திருக்கோழியில்) கார்த்திகை மாதத்தில், ரோகினி நட்சத்திரத்தில் ஸ்ரீவத்ஸ அம்சத்தில் (நாராயணனின் திருமார்பில் உள்ள மச்சக்குறி) 8-ஆம் நூற்றாண்டில் அவதரித்தவர். இவரது பெற்றோர், பணி குறித்து தகவல் எதுவும் இவரது வாழ்வுக் குறிப்பில் இல்லை. இவ்வாழ்வாருக்கு முனிவாகனர், யோகிவாகனர், கவீஸ்வரர் என்ற திருநாமங்களும் உண்டு.
Photobucket - Video and Image Hosting
குழந்தைப் பேறு இல்லாத பாணர் குலத்தவர் ஒருவரால் அன்போடு பேணி வளர்க்கப் பட்டவர். அவர் புகுந்த குலத்தில் பிரசத்தி பெற்ற யாழ் இசையில் சிறு வயதிலேயே மிகுந்த தேர்ச்சி பெற்றதனால், 'பாணர்' என்றே அழைக்கப்பட்டார். அவர் யாழைத் தொட்டபோதெல்லாம், அதிலிருந்து கேட்டவர் மனதை உருக்கும் இசை வெளிப்பட்டது !

ஸ்ரீரங்கத்துப் பெருமானின் மீது அளவிலா பக்தியின் வெளிப்பாடாக, இரவும் பகலும், காவிரிக் கரையில் நின்று, யாழை மீட்டி, கோபுரத்தை பார்த்தபடி (அவர் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்தவர் என்று கூறி உயர்சாதியினர் கோயிலுக்குள் அவரை அனுமதிக்காத காரணத்தால்) இனிமையாகப் பாடுவதை செய்து வந்தார். காவிரிக் கரையின் மணற்குன்றுகளில் உறங்குவார். அவருக்கு ஸ்ரீரங்கநாதரைத் தவிர உறவினர் யாரும் கிடையாது !!! உயர் குலத்தவர் (என்று தங்களை எண்ணிக் கொண்டவர்!) அவர் ஸ்ரீரங்கத்து தெருக்களில் கூட, தான் வருவதை முன் கூட்டியே அறிவித்த பின் தான், உலவலாம் என்று கட்டளையிட்டிருந்தனர் !

திருப்பாணாழ்வார் முக்தியடைந்தது குறித்து சுவையான நிகழ்வு ஒன்று பண்டைய குறிப்புகளில் சொல்லப்படுள்ளது !

ஒரு சமயம், அவர் காவிரியின் தென்கரையில் நின்றபடி, அரங்கநாதரே பேருவகை கொள்ளும் வண்ணம், அற்புதமாக பல நாட்கள் பாடிக் கொண்டு இருந்தார். அங்கு வந்த, ஸ்ரீரங்கத்தில் இறைசேவை செய்து வந்த லோகசாரங்கமுனி என்ற அந்தணர், அவரை எட்டிச் செல்லுமாறு பலமுறை பணித்தார், அரங்கனின் பக்தியில் திளைத்து, மோன நிலையில் நின்ற ஆழ்வார் அதைப் பொருட்படுத்தவில்லை.

சினமுற்ற லோகசாரங்கர், பாணர் மீது கல்லெறிய, அது ஆழ்வாரின் நெற்றியில் பட்டு காயம் ஏற்பட்டது. கண் விழித்த ஆழ்வார், தன் செய்கைக்கு லோகசாரங்கரே வெட்கும் அளவில், மன்னிப்பு கேட்டு, அவ்விடத்தை விட்டு அகன்றார். லோகசாரங்கரின் இச்செய்கையால், திருவுள்ளம் கலங்கிய, கோயிலில் எழிந்தருளிய ஸ்ரீரங்கப் பெருமானின் திருநெற்றியில் குருதி பெருக்குற்றதைக் கண்டு, லோகசாரங்கர் துணுக்குற்றார். இரவில் தூக்கமின்றித் தவித்தார்.

அவரது கனவில் தோன்றிய அரங்கன், ஆழ்வார் தன்னை தரிசிக்க வந்தாலொழிய, தனது கோயில் கதவுகள் திறக்கப்பட மாட்டாது என்றும், ஆழ்வாரை எப்பாடு பட்டாவது தன் முன் கூட்டி வருவது தான் லோகசாரங்கர் செய்த பெரும்பாவத்துக்கு பிராயசித்தம் என்றும் கூறி மறைந்தார். முற்றும் மனம் திருந்திய லோகசாரங்கமுனி காவிரிக்கரைக்கு ஓடி, கோயிலுக்கு வருமாறு பாணரிடம் மன்றாடிக் கேட்டார். பாணரோ கோயிலுக்குள் அடியெடுத்து வைக்க மறுக்க, மிகுந்த நிர்பந்தத்தின் முடிவில், லோகசாரங்கமுனி ஆழ்வாரை தன் தோளில் சுமந்து கோயிலுக்குக் கூட்டி வந்தார். இதனால் தான், இவர் 'முனிவாகனர்' என்றும் அறியப்படுகிறார்.

திருமாமணி மண்டபத்தில் வீற்றிருந்த அரங்கநாதப் பெருமான் முன் வந்திறங்கிய திருப்பாணாழ்வார், அரங்கனை தரிசித்த திவ்ய அனுபவம் தந்த பேருவகையில், திருவாய் மலர்ந்தருளிய 'அமலனாதி பிரான்' பாசுரங்களுக்கு ஈடு இணை கிடையாது!!! இந்த பத்து பாசுரங்களில் அரங்கனை, திருப்பாதத்தில் தொடங்கி திருக்கிரீடம் வரை, மிக மிக அழகாக பக்திப் பெருக்கோடு வர்ணித்திருக்கிறார். "என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே" என்று அமலனாதிபிரானை நிறைவு செய்த திருப்பாணாழ்வார், அரங்கனின் அடி பற்றி அக்கணமே திருவரங்கப் பெருமானுடன் ஒன்றறக் கலந்தார் !!!

அமலனாதிபிரான் உங்கள் வாசிப்புக்கு:

927@..
அமலன் ஆதிபிரான் * அடியார்க்கு என்னை ஆட்படுத்த-
விமலன், *விண்ணவர் கோன் *விரையார் பொழில் வேங்கடவன்,*
நிமலன் நின்மலன் நீதி வானவன், *நீள்மதிள் அரங்கத்து அம்மான், *திருக்-
கமல பாதம் வந்து
* என்கண்ணினுள்ளன ஒக்கின்றதே. (2) (1)

928@
உவந்த உள்ளத்தனாய்* உலகம் அளந்து அண்டமுற,*
நிவந்த நீள்முடியன்* அன்று நேர்ந்த நிசாசரரை,*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் *கடியார்பொழில் அரங்கத் தம்மான்,*
அரைச்சிவந்த ஆடையின் மேல் *சென்றதாம் என் சிந்தனையே. (2)

929@..
மந்தி பாய்* வட வேங்கட மாமலை,* வானவர்கள்,-
சந்தி செய்ய நின்றான்* அரங்கத்து அரவின் அணையான்,*
அந்தி போல் நிறத்து ஆடையும் *அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்*
உந்தி மேலதன்றோ* அடியேன் உள்ளத்து இன்னுயிரே. (2) (3)

930@
சதுரமா மதிள்சூழ்* இலங்கைக்கு இறைவன் தலைபத்து-
உதிர வோட்டி,* ஓர் வெங்கணை* உய்த்தவன் ஓத வண்ணன்*
மதுரமா வண்டு பாட* மாமயில் ஆடரங்கத்து அம்மான்,*திருவயிற்று-
உதர பந்தம்*
என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே. (4)

931@
பாரமாய* பழவினை பற்றறுத்து,* என்னைத்தன்-
வாரமாக்கி வைத்தான்* வைத்ததன்றி என்னுள் புகுந்தான்,*
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான்,*திரு-
வார மார்பதன்றோ*
அடியேனை ஆட்கொண்டதே. (5)

932@
துண்ட வெண்பிறையான்* துயர் தீர்த்தவன்* அஞ்சிறைய-
வண்டுவாழ் பொழில்சூழ்* அரங்கநகர் மேய அப்பன்*
அண்டர் அண்ட பகிரண்டத்து* ஒரு மாநிலம் எழுமால்வரை, *முற்றும்-
உண்ட கண்டம் கண்டீர்
*அடியேனை உய்யக்கொண்டதே. (6)

933@
கையினார் *சுரி சங்கனல் ஆழியர்,* நீள்வரை போல்-
மெய்யனார் *துளப விரையார் கமழ் நீள் முடியெம்
ஐயனார்,* அணியரங்கனார் *அரவின் அணைமிசை மேய மாயனார்,*
செய்ய வாய் ஐயோ.* என்னைச் சிந்தை கவர்ந்ததுவே. (7)

934@
பரியனாகி வந்த* அவுணன் உடல்கீண்ட,* அமரர்க்கு-
அரிய ஆதிபிரான்* அரங்கத்து அமலன் முகத்து,*
கரியவாகிப் புடைபரந்து* மிளிர்ந்து செவ்வரியோடி,* நீண்டவப்-
பெரிய வாய கண்கள்*
என்னைப் பேதைமை செய்தனவே. (8)

935@..
ஆலமா மரத்தின் இலைமேல்* ஒரு பாலகனாய்,*
ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்,*
கோல மாமணி ஆரமும்* முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்*
நீல மேனி ஐயோ.
* நிறை கொண்டது என் நெஞ்சினையே. (2) (9)

936@..
கொண்டல் வண்ணனைக்* கோவலனாய் வெண்ணெய்-
உண்ட வாயன்* என்னுள்ளம் கவர்ந்தானை,*
அண்டர் கோன் அணி அரங்கன்* என் அமுதினைக்-
கண்ட கண்கள்,* மற்றொன்றினைக்* காணாவே
. (2) (10)

என்றென்றும் அன்புடன்
பாலா

10 மறுமொழிகள்:

jeevagv said...

ஆழ்வாரின் மனதில் அரங்கன் - விளைவு திருபாசுரம்.
அதன் விளைவு - அரங்கன் மனதில் ஆழ்வார்.
படிக்கும் நம் மனதில் பாசுரத்தின் விளைவு - அரங்கன்!
நன்றி பாலா.

enRenRum-anbudan.BALA said...

ஜீவா,
//ஆழ்வாரின் மனதில் அரங்கன் - விளைவு திருபாசுரம்.
அதன் விளைவு - அரங்கன் மனதில் ஆழ்வார்.
படிக்கும் நம் மனதில் பாசுரத்தின் விளைவு - அரங்கன்!
//
உங்கள் கருத்து அழகாக உள்ளது ! நன்றி.
எ.அ.பாலா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மிகவும் அருமை பாலா,

மிகவும் நேர்த்தியாக, ஒவ்வொரு பாடலிலும், பெருமாளின் அந்த அந்த திரு அவயங்களை, bold font இல் கொடுத்து, ஆழ்வார் தரிசித்த அவ்வண்ணமே, நாங்களும் தரிசிக்க வைத்தீர்.

திருப்பாணாழ்வார், அரங்கன் கோவிலில்
நுழைந்ததும், இறைவன் பாதங்களைத் தான் முதலில் கண்ணுற்றாராம்.
"கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே" என்று ஆரம்பித்து, அவன் ஒவ்வொரு அவயமாக மேல் சென்று, "பாதாதி கேசம்" என்று சொல்லப்படுகின்ற "அடிமுடி" சேவையில் மனம் லயித்தார்.

//செய்ய வாய் ஐயோ.* என்னைச் சிந்தை கவர்ந்ததுவே
நீல மேனி ஐயோ. * நிறை கொண்டது என் நெஞ்சினையே//
என்று இரண்டு முறை "ஐயோ" என்றும்
ஆற்ற மாட்டாது விளிக்கிறார். எம்பெருமான் திருமேனி அழகை எவ்வளவு அனுபவித்து இருந்தால் "ஐயோ" என்று கூறி இருப்பார் பாருங்கள்?

திருக்கோழி தலம் பற்றிய தங்கள் பதிவில், திருப்பாணாழ்வார் பற்றியும் விரைவில் எழுதுவதாகச் சொல்லி இருந்தீர்கள். இவ்வளவு விரைவில் எழுதியதற்கு மிக்க மகிழ்ச்சி!

enRenRum-anbudan.BALA said...

கண்ணபிரான்,
கருத்துக்களை பகிர்ந்தமைக்கும், அன்பான பாராட்டுக்கும் நன்றி.
'Bold' ஆக கொடுத்தவற்றை சரியாக புரிந்து கொண்டீர்கள் :)
அமலனாதிபிரான் பாசுரங்களுக்கு (பக்திப் பேருவகையில்!) நிகரான சில நப்பாழ்வார் / திருமங்கையாழ்வார் பாசுரங்களும் உள்ளன. அவை குறித்து பின்னர் எழுதலாம் என்று எண்ணம்.
//இரண்டு முறை "ஐயோ" என்றும்
ஆற்ற மாட்டாது விளிக்கிறார். எம்பெருமான் திருமேனி அழகை எவ்வளவு அனுபவித்து இருந்தால் "ஐயோ" என்று கூறி இருப்பார் பாருங்கள்?

//
மிகச் சரியான கருத்து !
எ.அ.பாலா

குமரன் (Kumaran) said...

திருப்பாணாழ்வார் சரிதத்தை மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள் பாலா. அமலன் ஆதிப்பிரான் பாசுரங்கள் எல்லாவற்றையும் தந்ததற்கு நன்றி.

எப்போதும் போல் : பாசுரங்களுக்கு விளக்கமும் சொல்லியிருக்கலாமே. மிக நன்றாக இருந்திருக்குமே! :-)

கார்த்திகை ரோகிணியைக் குறித்து வைத்துக் கொள்கிறேன். எம்பெருமான் திருவருளால் அமலனாதிப்பிரான் பாசுரங்களுக்கு விளக்கம் சொல்ல முயல்கிறேன் கூடல் பதிவில்.

குமரன் (Kumaran) said...

ஆதிபிரான் என்பதை ஆதிப்பிரான் என்று மேலே குறிப்பிட்டுவிட்டேன். அது தவறு.

enRenRum-anbudan.BALA said...

Kumaran,
nanRi !

//எம்பெருமான் திருவருளால் அமலனாதிப்பிரான் பாசுரங்களுக்கு விளக்கம் சொல்ல முயல்கிறேன் கூடல் பதிவில்
//
Pl. do it. I am waiting :)

said...

தமிழ்மணப் பதிவாளர்கள் கவனத்திற்கு!

விடாது கருப்பு என்ற பெயரில் ஒருவர் இறைவனையும், மதத்தையும் ஒன்றாகக் குழப்பி, பிராமிணர்களையும், பிராம்ணீயம் என்ற சொல்லையும் ஒன்றாக வைத்துக் குழப்பித் தினம் 'விடாது' பதிவு போட்டுக் கொண்டிருக்கிறார்.
அசிங்கம், அசிங்கமாக எழுதிக்கொண்டிருக்கிறார்

இன்றைய பதிவில் அவர், 'கோவணத்துக்குள்ளா கடவுள் இருக்கிறான்?" என்று ஒரு பதிவு போடிருக்கிறார்

இது என்னைப் போன்ற இறை நம்பிக்கையுள்ளவர்களின் மனதை மிகவும் புண்படுத்துவதாக உள்ளது

என்னை மட்டுமல்ல என்னைப்போன்று அவர் எழுதியதைப்படிக்கும், இஸ்லாமியச் சகோதரர்களையும், கிறிஸ்தவச் சகோதரர்களையும் அது புண்படுத்துவதாக உள்ளது

இந்தியாவின் இறையாண்மையைக் கேள்விக்குரிய தாக்குகிறது!

அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கும் இறைவனை இதைவிடக் கேவலமாக யாராலும் எழுத முடியுமா?

இறைவன் என்பவர் ஒருவர்தான். அவரை வழிபடும் முறைகள்தான் வேறு படுகின்றன!

பெரியார் அவர்கள் சொன்னவற்றில் சமதர்மத்தை மட்டும்தான் என்னைப்போன்ற பாமர மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்!

கடவுளைப் பற்றி அவர் சொன்னதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை

அதனால்தான் அவர் ஆரம்பித்த இயக்கம் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறவில்லை!

இப்போது மிஞ்சி இற்கும், எஞ்சி நிற்கும் கருப்பு போன்ற பெரியார் அவர்களின் ஆதரவாளர்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வீம்பு கட்டிகொண்டு அசிங்கமாக எழுதக்கூடாது

ஆகவே இன்னும் 24 மணி நேரத்திற்குள் அந்தப்
பதிவை அவர் நீக்கி விட்டு, புதுப்பதிவு ஒன்றைபோட்டு இறையன்பர்கள் அனைவரிடமும் தன் வருத்தத்தைத் தெரிவிக்கவேண்டும்

இல்லையென்றால், அவர் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை போட்டிருக்கும் அத்தனை பதிவுகளையும் Laser Print எடுத்து அல்லது மின்னஞ்சலில் நமது மதிப்பிற்குரிய, குடியரசுத் தலைவர், மேன்மை மிகும் டாக்டர் திரு.அப்துல் கலாம் அவர்களுக்கு அனுப்பி வைப்பதாக உள்ளேன்

என்னைபோன்று புண்பட்ட நண்பர்களையும் அதைச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்

அவர் சிந்தாரிப்பேட்டையிலிருந்தாலும் சரி, சிங்கப்பூரிலிருந்தாலும் சரி, தர்மமும், சட்டமும் தன் கடமையைச் செய்யட்டும்!

குடியரசுத் தலைவர் அவர்களின் பிரத்தியேக இணையதளம்

The President of India :
The official website of the President of India (Dr. Avul Pakir Jainulabdeen (APJ) Abdul Kalam)
presidentofindia.nic.in/ - 37k - Cached - Similar pages
Write to the President -
http://presidentofindia.nic.in/scripts/writetopr...

Dr.N.Kannan said...

திருவரங்கத்தில் இரண்டு பேருக்குத்தான் பெரிய பெருமாளுடன் சேரும் பாக்கியம் கிடைத்தது. ஒன்று பெண், இரண்டு ஒரு தலித். இது வைணவ நீதி.

என் முந்தைய கட்டுரையை வாசிக்கவும்:

http://www.angelfire.com/ak/nkannan/Madals/pasuram10.html

இது தஸ்கி குறியீட்டில் அமைந்தது.

enRenRum-anbudan.BALA said...

கண்ணன் சார்,

நன்றி.
தாங்கள் கொடுத்த லிங்க்கில் உள்ளதை வாசித்து விட்டு வருகிறேன்.

எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails